கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை படையினர் விரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படையினர் தங்கள் படகிலிருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டியுடித்ததாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 30 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
எப்பொழுதுமே 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக நேற்று மட்டும் 236 அனுமதிச் சீட்டுகள் பெறப்பட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றார்கள். இந்நிலையில் கச்சத்தீவு அருகே 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு படத்திற்கும் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் கரை திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை துறை, பால்வளத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்ற போது டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கையில், ”மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோ அளவில் குறைந்துள்ளது'' எனகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.