Skip to main content

ஹெலிகாப்டரில் சேசிங்... பிடிப்பட்ட இலங்கை மீனவர்கள்... கைப்பற்றப்பட்ட தங்கம்....!!!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தி வருவதையறிந்த இந்தியகடற்படை வீரர்கள், கடத்தல் படகினை ஹெலிகாப்டரில் சேசிங் செய்து இலங்கை மீனவர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 35 தங்கக் கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் நடைப்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை இலங்கைக்கும், அதற்கு ஈடாக இலங்கையினர் தங்கக்கட்டிகளையும் கடத்தி வருவது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மாறாத வழமைகளில் ஒன்று. இருப்பினும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தங்களுடைய டீமை மட்டும் வைத்து சுங்க இலாகா, கடற்படையினர், தமிழக கடலோரகாவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவவு போலீசாரும் களத்தில் இறங்கி கடத்தலை தடுக்கப் போராடி வருகின்றனர்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

இது இப்படியிருக்க, நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய ஹெலிகாப்டர் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் ரோந்து சென்ற பொழுது, தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் பிளாஸ்டிக் படகின் இந்திய பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களை தடுத்தும் நிறுத்தும் நோக்கில் முதலில் அறிவிப்பு செய்துள்ளனர். படகும் நிற்காமல் செல்ல, விடாமல் அதனை விரட்டி சேசிங் செய்து தனுஷ்கோடி அருகில் அரிச்சல்முனை கடல் பகுதியில் வைத்து பிடித்து தமிழக கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை வீரர்கள்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

விசாரணையில், "தாங்கள் மன்னார் பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்ததாகவும், காற்று காரணமாக இந்திய கடல் பகுதிக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும்" தெரிவித்தனர். எனினும், சந்தேகமடைந்த போலீசாரின் தொடர் விசாரணையில், "தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சிலரிடம் கொடுப்பதற்காக தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், அது படகின் பின்பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறி இடத்தினையும் காண்பித்தனர். படகின் பின்புறத்தில் உடைத்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிராம் அளவு கொண்ட 35 தங்க கட்டிகள் இருப்பதையறிந்து அதனைக் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளையில், கடத்தல் தங்கம் பெற்றுக்கொள்ள தங்கச்சி மடம் பகுதியிலுள்ளவர்கள் யார்..? என்ற விசாரணையை துவக்கியுள்ளது உள்ளூர் போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸ். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்