நடிகர் ஜீவா திருவண்ணாமலையில் நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டித் தொடரை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் இரண்டும் இணைந்து நடத்துகின்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு விளையாட்டுத்துறை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மிகக் குறைவாகத்தான் ஆட்கள் சேருவார்கள். நான் நினைக்கிறேன், இளம் அமைச்சர் அத்துறையை ஏற்று நடத்துகிறபோது உண்மையாகவே சிறப்பாக உள்ளது. இணைய உலகம் வந்ததில் இருந்து இங்கிருக்கும் அனைத்தும் சிறியதாக மாறிவிட்டது.
திறமையானவர்களை கண்டறிவது மிக எளிதான விஷயமாக உள்ளது. சிலர் விளையாட்டு நிகழ்வுகளையும் போட்டிகளையும் ஏற்று நடத்துகிறார்கள். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும். வரும் ஒலிம்பிக், ஏசியன் போட்டிகளிலும் தமிழகத்தில் இருந்து செல்லும் வீரர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும். நிச்சயமாக இந்தியா உலக விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.
விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடக்கூடாது. தற்போதைய இளைஞர்களுக்கு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. அவர்களே அவர்களுக்கான ஆலோசனைகளை கொடுத்துக் கொள்கிறார்கள். நேர்மறையான சிந்தனையில் அவர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பெரிய அளவில் உலகில் காட்ட வேண்டும்.” என்றார்.