தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோவிலில் கெட்டுப் போன பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவதாகத் தகவல் வெளியான நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் குற்றாலநாதர் கோவில். இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சீசன் நேரங்களில் இங்கு கூட்டம் அதிமாக இருக்கும். இந்நிலையில் ஆலயத்தின் பிரதான பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் தயாரிக்கப்படும் பிரசாதம் தரமற்று இருப்பதாகவும், கெட்டுப்போன பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்குவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி நாத சுப்பிரமணியன் திடீரென இன்று கோவிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். உணவு தயாரிக்கும் இடம், உணவு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட பூச்சி, வண்டுகள் கிடந்த 750 கிலோ பச்சரிசி, பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன 48 லிட்டர் எண்ணெய் டின்கள், 15 கிலோ பச்சரிசி மாவு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.