திருவண்ணாமலை நகரத்தில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது, பள்ளி மாணவர்களுக்கே சுலமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறை தடுப்பதில் எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகர மன்ற கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள் எங்கள் பகுதிகளில் கஞ்சா விற்கிறார்கள் என குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப் பாதையில் உள்ள சாமியார்களிடமும் கஞ்சா பழக்கம் அதீதமாக உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்தார்கள் என சமுத்திரம் காலணி பிரவீன்குமார், விக்னேஷ், காட்டு மலையனூர் சந்துரு ஆகிய மூவரை கைது செய்துள்ளது திருவண்ணாமலை நகரக் காவல் துறை. அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள இவர்களை விட பெரிய பெரிய கேங்க் எல்லாம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி காவல்துறை, பாண்டிச்சேரிக்கு திருவண்ணாமலையிலிருந்தே கஞ்சா வருகிறது என குற்றம் சாட்டியது.திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா வருகிறது. இங்கிருந்து பல இடங்களுக்கு செல்வதாக அப்போதே பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் கூறப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையாரை கோவிலை தரிசிப்பதற்காக கிரிவலம் வருவதற்காக ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்த கூட்டத்தோடு கஞ்சா கடத்தல் கும்பல்களும் சேர்ந்து வந்து விடுகின்றன. அன்றைய தினம் காவல்துறையின் வாகன சோதனை எதுவும் இருக்காது என்பதால் கஞ்சாவைக் கொண்டு வந்து இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள் என்கிறார்கள்.
ஆன்மீக நகரம் என்பது வருங்காலத்தில் கஞ்சா நகரம் என பெயர் மாற்றம் அடைவதற்கு முன்பு காவல்துறை கஞ்சா கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.