Skip to main content

நீட் பாதிப்பு! மோடி அரசு மீது மாற்றுத்திறனாளிகள் கோபம்!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
நீட் பாதிப்பு! மோடி அரசு மீது மாற்றுத்திறனாளிகள் கோபம்!



ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பின் அகில இந்திய தலைவர் ஜான்சிராணி விருதுநகரில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது,  

“நீட் மற்றும் ஜிஎஸ்டியால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மாற்றுத் திறனாளிகளின் 2-வது அகில இந்திய மாநாடு விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 2-வது நாள் மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.

இந்த மாநாட்டில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். மோடியின் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளின் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் அலசி ஆராய்ந்து, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்திடும் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கான முன்வடிவை இந்த 2-வது தேசிய மாநாடு தீர்மானிக்கும்.

நீட்டால் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 120 மருத்துவ இடங்களில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று உடல் உறுப்புக்களாகப் பயன்படுகின்ற உபகரணங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்காமல், ஜிஎஸ்டியில் 5 முதல் 18 சதவீத வரிவிதிப்பு செய்திருக்கின்றனர். இதனால், ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் கோபத்தையும் மோடியின் மத்திய அரசு சம்பாதித்திருக்கிறது. இதற்கு முழு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இந்த மாநாட்டில் போராட்ட வடிவுகளை அமைத்திட தீர்மானித்திருக்கிறோம்.” என்றார் ஆதங்கத்துடன்.

-சி.என்.இராமகிருஷ்ணன்



சார்ந்த செய்திகள்