நீட்: சி.எம்.சி. நடவடிக்கை வரவேற்கத்தக்கது: அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்: ராமதாஸ்
நீட் விவகாரத்தில் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கிறித்தவ மருத்துவக் கல்லூரி கூறியுள்ள இந்தக் காரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் நீட் சட்டத்திற்கு பணிந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவற்றை மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு தாரைவார்த்துள்ள நிலையில், நீட் சட்டப்படி நடக்க முடியாது என்று கூறி நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி கைவிட்டிருக்கிறது. இந்த துணிச்சலான நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
மாணவர் சேர்க்கையை கைவிட்டது ஏன்? என்பது குறித்து கிறித்தவ மருத்துவக் கல்லூரி அளித்துள்ள விளக்கம் நியாயமானது. ‘‘தகுதி என்பதை மதிப்பெண் அடிப்படையில் மட்டும் அரசு வரையறுக்கிறது. எங்களுக்கு தேவைப்படும் மருத்துவர்களுக்கான தகுதி மாணவர்களுக்கு உள்ளதா? என்பதை, எங்களின் 3 நாள் தேர்வு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள அம்சங்களான மக்களுக்கு சேவை செய்வதற்கான உறுதிப்பாடு, தலைமைப்பண்பு திறன்கள் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள மாணவர் சேர்க்கை நடைமுறையில் இது சாத்தியமில்லை’’ என்று அந்தக் கல்லூரி கூறியிருக்கிறது.
கிறித்தவ மருத்துவக் கல்லூரி கூறியுள்ள இந்தக் காரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவச் சேவைக் கட்டமைப்பு தமிழகத்தில் தான் உள்ளது. இதற்குக் காரணம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்த மருத்துவர்கள் பல்வேறு காரணங்களால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற முன்வருவது தான். தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்டு வந்த மருத்துவப் படிப்பு, மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை முறை ஊரக மருத்துவ சேவையை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் ஊரக மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப் படுவதன் காரணமாக, அவர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளில் மருத்துவச் சேவை செய்ய முன்வருவதால் தான் கிராமப்புற மருத்துவ சேவைக் கட்டமைப்பு வலிமையாக உள்ளது. இந்தக் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டுமானால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த சேர்க்கை முறை தொடரப்பட வேண்டும்.
நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை இந்தக் கட்டமைப்பை சீர்குலைத்து விடும். நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மத்திய பாடத் திட்ட மாணவர்களுக்கு சென்றிருக்கிறது. மருத்துவ மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி அதன் சேவைக் கட்டமைப்பை பாதுகாக்க மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து போராடுவதைப் போன்று தமிழகமும் அதன் மருத்துவச் சேவைக் கட்டமைப்பை பாதுகாக்க இதே போன்ற எதிர்ப்பு வடிவத்தை கையிலெடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று விட்டது என்பதாலேயே தமிழக மக்கள் நீட்டை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. இன்னும் கேட்டால் நீட் தேர்வு முறை செல்லும் என உச்சநீதிமன்றமே இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு நீட் தேர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அத்தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர். நீட் செல்லுமா? என்பது குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி இரு ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு விட்ட நிலையில், நீட்டுக்கு எதிரான வழக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வழக்கை விசாரிக்கும் அமர்வு கூட இன்னும் அமைக்கப்படவில்லை. இது சமூகநீதிக்கு எதிரான மிகப்பெரிய சதி ஆகும்.
இப்போதைய நிலையில், ஒருபுறம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து நீதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு புறம், ஒவ்வொரு மாநிலமும் அதன் மருத்துவ சேவைக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; அதற்கு கல்வியையும், மருத்துவக் கல்வியையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல்ரீதியில் அழுத்தம் கொடுத்து மாநில உரிமைகளை வென்றெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.