Skip to main content

“பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்..” - ஹரிணி ராம்சங்கர்

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

"Special classes should be conducted." - Harini Ramshankar

 

கட்டுரை: சட்டக்கல்லூரி மாணவி ஹரிணி ராம்சங்கர்

 

கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மாணவி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி அம்மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டக்கல்லூரி மாணவி ஹரிணி ராம்சங்கர், ‘பாலியல் தொல்லையால் கோவை பள்ளி மாணவி தற்கொலை. “யாரையும் சும்மா விடக்கூடாது” யார் காரணம்? இன்னும் எத்தனை? என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். 

 

அவர் எழுதிய கட்டுரை, (சட்டக் கல்லூரி மாணவியின் ஒரு சிறு கட்டுரை ஆய்வுகளுடன்) இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்மயா வித்யாலயா ஆர்.எஸ். புரம், பள்ளியில் பயின்று வந்த 11ஆம் வகுப்பு மாணவி, தனது பள்ளி ஆசிரியர் மற்றும் சில கொடூர ஆண்களின் பாலியல் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டதாக (Suicide note) தற்கொலை கடிதத்தில் எழுதி விட்டு ஒரு ஆடியோ பதிவும் பேசிவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டதற்குக் கீழ்க்கண்ட கொடியவர்களே! காரணம் எனச் சொல்கிறது அந்த குழந்தையின் கீழ்க்கண்ட கண்ணீர் வரிகள்.

 

யாரையும் சும்மா விடக்கூடாது

தனது தோழியின் தாத்தா 
மற்றோரு தோழியின் தந்தை 
தனது இயற்பியல் ஆசிரியர் 

யாரையும் சும்மா விடக்கூடாது


என மூவரைப் பற்றி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். 

 

மேற்கண்ட வரிகளில் இரண்டு முறை ‘யாரையும் சும்மா விடக் கூடாது’ என மூன்று நபர்களை குறிப்பிடுகிறாள் அந்தக் குழந்தை.

 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியதில் கடைசியில் உள்ள 'தெய்வம்' கைவிட்டதால், அந்த மாணவியின் தந்தை போன்றவரான தனது பள்ளித் தோழியின் தந்தை ஒருவரும், தாத்தாவும், குருவான பள்ளி ஆசிரியர் ஒருவரும் தான் தனது இறப்பிற்குக் காரணம் எனத் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த தங்கக் குழந்தையை நாமும், நமது சமூகமும், நமது அரசாங்க சட்டங்களும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டது.

 

இது தற்கொலை அல்ல ஒரு கொலை. இதற்குக் காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கபட வேண்டும். என்ன சொல்கிறது நமது நாட்டின் சட்டங்களும், வெளிநாட்டின் சட்டங்களும் ஒரு சிறு பார்வை;

 

நம் நாட்டின் தேசிய குற்றப் பதிவு பணியகம் (NCRB) (National Crime Record Bureau)

 

தனது 2017- 2018 ஆய்வில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாகவும், 109 குழந்தைகள் ஒரு நாளைக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவதாகவும் நமது இந்திய அரசின் (NCRB) எனப்படும் ஆவண பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இது அரசிற்கு தெரிந்த எண்ணிக்கை. தெரியாமல் எத்தனையோ?

 

சட்டங்களும் தண்டனைகளும்:

 

இந்தியா:
 

2013ஆம் ஆண்டு தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கிற்குப் பின்னர் 7 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த தண்டனையைப் பெற பல ஆண்டுகள் நீதிமன்ற  போராட்டம் நடத்த வேண்டும் என்பதே நமது நாட்டில் சட்டம்.

 

சீனா:
 

குற்றவாளிக்கு உடனடியாக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

 

சவுதி அரேபியா:
 

குற்றவாளிகளின் தலைகள் ஒரே நாளில் பொது இடத்தில் பொது மக்கள் முன்னிலையில் துண்டிக்கப்படும்.

 

வட கொரியா:

உடனடியாக நாட்டின் ஜனாதிபதி உத்தரவின் பெயரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவர்.

ஆப்கானிஸ்தான்:
 

தலையில் சுடப்பட்டோ, தூக்கு கயிற்றில் ஏற்றப்பட்டோ, நான்கு நாட்களில் கொல்லப்படுவர்.

 

ஈரான்:
 

தூக்கில் இடப்பட்டு உடனடியாக கொல்லப்படுவர்.

 

எகிப்து:
 

தூக்கில் இடப்பட்டு உடனடியாக கொல்லப்படுவர்.

 

இப்படிப்பட்ட உடனடி தண்டனைகள் பல்வேறு நாடுகளில் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் பாலியல் தொல்லைக்கு தூக்குத் தண்டனைகள் வழங்குவது நடைமுறையில் மிக மிகக் குறைவு. மேலும், பள்ளிக் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கூட தொலைபேசி மற்றும் காணொளிகள் வாயிலாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதற்கான தனிப்பட்ட வழிமுறைகளோ, சட்டங்களோ இன்று வரை இல்லை.


‘விசாகா’ வழிமுறைகள் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும், போக்சோ சட்டங்கள் குழந்தைகளை பாழ்படுத்தும் நபர்களை தண்டிக்க இருந்தாலும், குறிப்பிடும்படி பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஒரு தெளிவான வழிகாட்டுதல்கள் இன்றுவரை நம் நாட்டில் இல்லை.

இது சம்பந்தமாக சமீபத்தில் நக்கீரன் ஆசிரியர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், அப்பாவி பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுக்கவும், அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் வழிமுறைகளை வகுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக மாவட்டந்தோறும் குழு அமைத்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஆணையிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அது வரவேற்கத்தக்கது.


இப்படிப்பட்ட சட்டங்கள் வந்துவிட்டால் குற்றங்கள் குறையும். குழந்தைகள் பாதுகாக்கப்படும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும், பொறுப்புள்ளவர்களாக. கவனமாக இருப்பர்.

 

கோவை குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு உடனடியாக செய்யப்பட வேண்டியவை:

 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், கொலையாளிகள் என உறுதிப்படுத்தி உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். 

 

ஒவ்வொரு முதல்வரும் தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டம் தோறும் நல்ல நேர்மையான அதிகாரிகளின் தலைமையில் குழுக்கள் அமைத்து இப்படிப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு குறித்துச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பொது மக்கள் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சனைகளைப் பத்திரிகை மூலம் தெரிந்துகொண்டு, வேதனைப்படுவதை விட்டுவிட்டு தனது குடும்பத்தில் உள்ள குழந்தைகளை, பெண்களை எப்படிப் பாதுகாப்பது என்று சொல்லித்தர வேண்டும்.

 

இனி எந்தவொரு குழந்தையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக் கூடாது என இறைவனை வேண்டுவோம். ஒவ்வொரு ஆணும், வயது வரம்பு இன்றி இன்றே தனது தாய், சகோதரிகள் மீது சத்தியம் செய்து, ‘தான் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பாலியல் துன்புறுத்தல் தரமாட்டேன்” என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழியை இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு நபரும் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட உறுதிமொழி காணொளிகள், சமூக ஊடகங்களில் அனைவரும் பதிவிட வேண்டும்.

 

முதல்வர் முதல் கடைக்கோடி மனிதன் வரை இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்