பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் பொங்கலுக்குப் பின் சொந்த ஊர் திரும்ப வசதியாக 15,270 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், முக்கிய இடங்களில் 5,993 பேருந்துகளும் இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கு பேருந்து இயக்கப்படும். அதேபோல் சிறப்பு பஸ் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில்-10, தாம்பரத்தில்-2, பூந்தமல்லியில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து செல்லும் வழித்தடங்கள் குறித்த விவரங்களை அறிய, 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்துகளின் இயக்கம் பற்றி அறிய '94450-14450', '94450-14436' என்ற எண்ணையும், அதிக கட்டணம் தொடர்பாக புகாரளிக்க '1800 425 6151' என்ற எண்ணையும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில், 'www.tnstc.in', 'tnstc official app', 'www.redbus.in' ஆகிய தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.