தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வெளியூரில் இருந்து பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி வழக்கமாக தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை தவிர்த்து 10 ஆயிரத்து 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என சென்னையில் இருந்து மட்டும் 5 இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளன. அதே போன்று தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்பி செல்ல ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.