தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தனது அனுபவங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பாக்யராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று தலைப்பில் பேசி வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் பாக்கியராஜ், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.
நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் பாக்கியராஜ் பகிர்ந்த வீடியோ குறித்து அறிக்கை மூலம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்ததுள்ளார். அந்த அறிக்கையில், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இது சம்பந்தமான குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாகச் செல்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 2023 ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. பயிற்சி பெற்ற காவலர்கள் தொடர்ந்து பணியிலிருப்பதால், கடந்த 2023ம் ஆண்டு 914 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது'' என அறிக்கையில் பாக்கியராஜ் வீடியோவில் கூறியதை முற்றிலும் மறுத்தார்.
தொடர்ந்து பவானி ஆற்றில் விபத்து நடக்கும் காரணம் பற்றி அறிக்கையில் கூறிய எஸ்பி, “2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே விபத்தில் சிக்கி இறப்பதற்கான காரணம்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, இதுபோன்று பவானி ஆற்றில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க, ஆற்றில் 19 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலமும் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை எனவும் தனது அறிக்கையில் எஸ்.பி. விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் இறுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது என்றவர், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்துள்ளார். இதையடுத்து, பாக்கியராஜ் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அம்பாரம்பாளையம் பகுதி மக்கள், “பவானி, கொடிவேரி ஆறுகள் குறித்து கட்டுக் கதைகள் ஏராளம். மழை பெய்தாலே பில்லூர் அணையிலிருந்து அதிகம் தண்ணீர் வரும், ஆற்றில் ஏற்கனவே ஆங்காங்கே பாறை இடுக்குகள் உள்ளதால் சுழல் ஏற்பட்டு நீச்சல் தெரியாதவர்கள சிக்கிக் கொள்கிறார்கள். ஆற்றின் கரையோரம் இருக்கும் கோவிலில் அவ்வப்போது வேண்டுதல் நிறைவேற கிடாய் வெட்டுவார்கள். இதில் நடைபெறும் கறி விருந்துக்கு பின் சிலர் மது போதையோடு ஆற்றுக்குள் இறங்கி அதிகம் சிக்குகிறார்கள். இதில் அதிகம் சிக்குவது ஆற்றின் போக்கு அறியாத வெளியூர் மக்கள் தான். பாக்கியராஜ் சொன்னது அவரின் திரைக்கதைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஒருவேளை அவருக்கு யாராவது ஆதாரமற்ற தகவலை நம்பும்படி சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால், பிரபலமான ஒருவர் அதனை மக்களிடம் சொல்லும்போது தீர விசாரித்து சொல்லி இருக்க வேண்டும்..'' என கருத்து தெரிவித்தனர்.
திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அடிப்படையில் ஆதாரமற்ற ஒரு தகவலை பரப்பியுள்ளார் என கோவை எஸ்.பியே மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.