குமரி மாவட்டத்தில், சமீபகாலமாக செல்ஃபோன் திருட்டுப் புகார்கள் அனைத்துக் காவல் நிலையங்களிலும் தொடா்ந்து பதிவாகிவருகின்றன. இந்த செல்ஃபோன்கள் எல்லாமே ஆன்ட்ராய்டு வகையைச் சோ்ந்தது. இதனால் அந்த செல்ஃபோன்களை கண்டுபிடிக்கவும் மேலும் செல்போன் திருட்டை தடுக்கவும் எஸ்.பி பத்ரி நாராயணன், உதவி ஆய்வாளா்கள் முகம்மது சம்சீா், செண்பகப் பிரியா தலைமையில் தனிப்படை அமைத்தார்.
இந்த தனிப்படையினா் இணையக் குற்றப்பிரிவு குழுவினருடன் சோ்ந்து திருடபட்ட மற்றும் தவறவிட்ட செல்ஃபோன்கள் 112 -ஐ கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த செல்ஃபோன்களின் உரிமையாளா்களை நேரில் அழைத்து அவா்களிடம் எஸ்.பி பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். அந்த செல்ஃபோன்களின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். பின்னா் தொடா்ந்து எஸ்.பி செய்தியாளா்களிடம் கூறும் போது, "2020 பிப்ரவரி மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரை பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட செல்ஃபோன்கள் 375 கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் இரண்டாவது கட்டமாக, இன்று 115 பேரிடம் அவா்களுடைய செல்போன் ஓப்படைக்கபட்டது. அதே போல் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மற்றும் திருடப்பட்டு அனாதையாக ரோட்டு ஓரங்களில் நிறுத்தப்பட்ட 29 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கடந்த 3 மாதங்களில் திருடப்பட்ட 100 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு 40 குற்றவாளிகள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக போலீஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.