தமிழக புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்க கூடிய சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தமிழகம் முழுவதும் பல புதிய உத்தரவுகளை பிறப்பித்து, காவல்துறையினர் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கொடுத்திருக்கிறார். மேலும் காவல்துறையில் பணியாற்ற கூடியவா்கள் எந்தவித குற்றசம்பவங்களுக்கும் துணைபோக கூடாது என்றும், அப்படிபட்ட செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரையும், காவல்நிலையங்களையும் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பாளா்கள், மாநகர ஆணையர்கள் அவ்வபோது நேரில் சென்று ஆய்வு நடத்திட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் முனைவர்.மூர்த்தி லால்குடி காவல்நிலையத்தில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
அப்போது காவல்நிலையித்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் முறையாக பராமறிக்கப்படாமல் இருந்ததை கண்டுபிடித்தார்.மேலும் வருகை பதிவேடுகளில் கையெழுத்து மட்டும் போடப்பட்டு காவலா்களில் சிலர் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. இதுத்தொடர்பாக லால்குடி காவலா்களிடம் விசாரணை செய்ததில் உரிய பதில் கிடைக்கவில்லை.
மேலும் 6 ஆய்வாளா்கள், 2 துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களுக்கு காவல்துறையினர் உறுதுணையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்ட புறநகா் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும், காவல்துறையினரே உறுதுணையாக செயல்படுவதை அறிந்து அவர் தற்போது அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
புறநகா் பகுதிகளில் இருந்து ஆய்வாளா்கள் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நேற்று லால்குடி காவல்நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் எஸ்.ஐ உள்ளிட்ட 16 காவலா்களை எஸ்.பி.மூர்த்தி ஆயுதபடைக்கு கூண்டோடு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆயுத படையில் பணியாற்றி வந்த 16 பேரை உடனடியாக லால்குடி காவல்நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.