திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுவதால் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த வண்ணம் உள்ளனர். அப்படி இருந்தும் திண்டுக்கல் மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கடந்த சில தினங்களாகத் திண்டுக்கல் நகர் முழுவதும் நடைப் பயணமாக சுமார் 15 கிலோ மீட்டர் காவலர்களுடன் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சைக்கிளில் பேரணியாக ரோந்து பயணத்தை மேற்கொண்டார்.
திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகளான கடைவீதி, பழனி ரோடு, காட்ஸ்பத்திரி, நாகல்நகர், பேகம்பூர் உள்பட சில பகுதிகளில் இவர் ரோந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் தினந்தோறும் எஸ்பி இந்த ரோந்து பணியை மேற்கொள்வதால் நாங்கள் அச்சப்படாமல் இருக்கின்றோம் எனத் தெரிவிக்கிறார்கள். மேலும் இவரின் ரோந்து பயணத்தை அறிந்து குற்றவாளிகளும் ஓடி ஒளியத் தொடங்கியுள்ளனர். இப்படி திண்டுக்கல்லில் உள்ள ரவுடிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கி பொது இடங்களில் குடிப்பதைக் கண்டறிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைக் கண்டு குடிமகன்களும் பீதியிலிருந்து வருகிறார்கள்.