தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் தென் தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயலான பிபோர்ஜோய் நேற்று காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
வெப்பச் சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.