நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காதை கிழிக்கும் வகையில் ஏர் ஹாரன் அடித்துச் சென்ற தனியார் பேருந்துகளை நிறுத்தி பெண் ஆர்.டி.ஓ ஹாரன்களை கழட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், பேருந்து நிலையத்திற்கு சென்ற மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பல்வேறு தனியார் பேருந்துகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது விதியை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை கழட்ட உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு தனியார் பேருந்துகளையும் சோதனை செய்து அதிலிருந்த ஏர் ஹாரன்களை கழட்ட வைத்தார். 'அடுத்த முறை வரும்போது இந்த ஏர் ஹாரனை யூஸ் பண்றத பார்த்தேன் அவ்வளவுதான்' என எச்சரித்தார். சிலர் ஹாரனை கழட்ட மறுத்த நிலையில் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார் ஆர்.டி.ஓ ஆய்வாளர்.
ஏர் ஹாரன் குறித்து ஆய்வு மேற்கொள்வதை அறிந்த சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அவர் கண்ணில் படுவதற்கு முன்பாகவே ஹாரன்களை கழட்டிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த பெண் ஆர்டிஓ, ''பொறுமையா கழட்டுங்க. ஒன்னும் அவசரம் இல்ல. சூப்பர் வெரி குட் இப்படித்தான் இருக்க வேண்டும்' என பாராட்டுவது போல் எச்சரித்தார்.
''ஏர் ஹாரன்களை வைக்கும் பொழுது வேக்கம் பிரஷர் குறைந்து பேருந்தின் பிரேக் சரியாக பிடிக்காது என தெரிந்தும் ஏன் நீங்கள் இப்படி இதை பயன்படுத்துகிறீர்கள். இது உங்கள் உயிருக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் உலை' என ஓட்டுநர்களிடம் கடிந்து கொண்டார். சில பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை கழட்டி பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடைகளில் மறைத்து வைத்திருந்தனர். அதனையும் கண்டுபிடித்த பெண் ஆர்டிஓ, அந்த ஹாரன்களைக் கைப்பற்றி தனியார் பேருந்துகளின் சக்கரத்திலேயே வைத்து ஏற்ற வைத்து நசுக்கினார். இப்படி பெண் ஆர்.டி.ஓவின் திடீர் ஆய்வால் பேருந்து நிலையத்தில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.