2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 5,478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜி.டி.பி.யில் 3.94%, ரூபாய் 84,202.39 கோடியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான செலவினத்தை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
புதிய நீதிமன்ற கட்டடங்களைக் கட்ட ரூபாய் 289.78 கோடி உட்பட நீதித்துறைக்கு ரூபாய் 1,437.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 'RIGHTS' என்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசின் திட்டம் உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது. 2021 - 2022ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூபாய் 688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14- வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யவில்லை. 15- வது நிதிக்குழு இறுதி அறிக்கை தமிழகத்திற்கு உரிய பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தீயணைப்புத்துறைக்கு ரூபாய் 436.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூபாய் 22,218.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வரவு - செலவு திட்ட நிதி, 2021 - 2022 ஆம் ஆண்டு இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் 9,567.93 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.