இலங்கை அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ள வேண்டுகோள்:
’’எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. சில சமயங்களில், மீன்பிடி வலைகளை அறுத்து எறிவதுடன், தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடும் நடத்துகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையைக் கண்டிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக அபராதத் தொகை வசூலிக்க வகை செய்யும் மீனவ மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டு மீன்பிடி படகுகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவை, இலங்கையின் மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் மகேந்திர சமரவீர இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்மூலம், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் நிலை ஏற்படும். இது தமிழக மீனவர்களுக்கு மிக மிக ஆபத்தான ஒன்றே! முற்றிலும் அவர்களை அழித்து ஒழித்தே தீருவது என்ற கொடூர நோக்கமாகும்.
தமிழர்களுக்கு மட்டுமே! இலங்கைக் கடற்பகுதியில் தென்பகுதி, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மலேசிய மீனவர்கள், சீன மீனவர்கள் மற்றும் அரேபிய மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு ராஜபக்சே ஆட்சிகாலத்தில் இலங்கைக் கடற்பரப்பில் சீனர்கள் மீன்பிடிக்க ஏகபோக உரிமை வழங்கப்பட்டது. முக்கியமாக இலங்கையில் நீண்ட கடல் எல்லையாக விளங்கும் தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமம் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு இலங்கை மீனவர்கள் கூட மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் மலேசிய மீனவர்கள் இலங்கைப் பகுதியில் கிடைக்கும் வெள்ளை இறால் இன மீன்களைப் பிடிக்க குறிப்பிட்ட பருவத்தில் அதிக அளவில் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். ஆனால், இதுகுறித்து அவர்கள் தொடர்பான எந்த ஒரு வழக்கையும் இலங்கை அரசு பதிவுசெய்யவும் இல்லை; நடவடிக்கை எடுத்ததும் இல்லை. மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதால், அந்நாட்டு மீனவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
ஆனால், தங்களது எல்லைகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை பன்னாட்டு சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்ட திருத்தம் கொண்டுவந்து மீனவர்களை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழக மீனவர்களின் உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டவர்கள் எங்கே போனார்கள்?
தமிழ்நாடு அரசும் யாருக்கோ வந்த விருந்தாக அடிமைச் சேவகம் செய்து வருகிறது. கடிதம் எழுதி விட்டோம் என்ற வழக்கமான பதிலோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து ஒவ்வொரு நாளும் மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றிட, உருப்படியான முயற்சிகள் எடுக்கப்பட ஆவன செய்யவேண்டும்.
இலங்கையின் புதிய சட்டத்தை விலக்கிக் கொள்ளச் செய்ய இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே மத்திய அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரியது செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.'’’