திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் அனைத்து கோவில்களிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலையில் போனில் பேசிய ஒரு மர்ம நபர், திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைத்துள்ளோம் அது சிறிது நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறி போன் லையனை துண்டித்து விட்டான்.
இதனையடுத்து காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திண்டுக்கல் வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் உடனே மோப்ப நாய் உதவியுடன் சீனிவாச பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதா? என அதிரடி சோதனை நடத்தினர். அதன் முடிவில் எங்கும் வெடிகுண்டு இல்லாததால் வெறும் புரளி என தெரிய வந்தது. இருந்தாலும் தாடிக்கொம்பு பெருமாள் கோவில், பழனி சவுமியா நாராயண பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள எட்டு பெருமாள் கோவில்களில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் எங்கும் வெடிகுண்டு சிக்காததால் அது வதந்தி என போலீசார் தெரிவித்தனர். எனினும் பெருமாள் கோவிலில் போலீசார் பாதுகாப்பு போடபட்டுள்ளது. அதோடு போனில் பேசிய மர்ம நபர் யார்? எங்கிருந்து பேசினார் என்ற விபரங்களை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதன் மூலம் கூடிய விரைவில் அந்த மர்ம நபர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்க போகிறது என்ற செய்தி கேட்டு மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.