ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரித்துள்ள கைதி திரைப்படம் இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். தமிழக அரசும் கடந்த ஆண்டு போலவே, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்று நேரக்கட்டுப்பாடு விதித்தது.
‘உச்ச நீதிமன்றமே உத்தவிட்டிருக்கிறது; தமிழக அரசே நேரக்கட்டுப்பாடு விதித்துவிட்டது’ என்று இதுபோன்ற உத்தரவுகளெல்லாம் கடைப்பிடிக்கப்படுகிறதா?
முதலில் கைதி திரைப்படம் குறித்து பார்ப்போம். கைதியை மட்டுமல்ல.. பிகில் திரைப்படத்தையும், ரிலீஸான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் சவால்விட்டு வெளியிட்டது.
அடுத்து, பட்டாசு குறித்த உத்தரவுக்கு வருவோம். தமிழகத்தில் இந்த நேரக் கட்டுப்பாட்டையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தீபாவளி நாளான இன்று அதிகாலையிலிருந்து இந்த நிமிடம் (4-24 PM) வரையிலும் தங்களின் வசதிக்கேற்ப பட்டாசுகளை வெடித்துத் தள்ளுகின்றனர். இத்தனைக்கும், கடந்த ஆண்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்குகள் பதிவானது.
சட்டம் போட்டுவிடலாம்; உத்தரவு பிறப்பித்துவிடலாம். மக்களே உணர்ந்து கடைப்பிடித்தாலொழிய, அதனை நடைமுறைப்படுத்துவது கடினம்தான்!