ஏற்காடு அருகே, இரட்டைக் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு மேலும் இரண்டு கொலைகளில் தொடர்பு இருப்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் மாவட்டம் ஏற்காடு குண்டூர் தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியான் (60). அதே பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (63). இவர்கள் இருவரும் மே 7, 2019ம் தேதியன்று, தெப்பக்காட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/OzF9nkg5w8VouZdjqtAWpnFs7-OxiB5bL1Dq7Fb1bO8/1557454893/sites/default/files/inline-images/salem_20.jpg)
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஏற்காடு காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கொன்றது தெப்பக்காட்டைச் சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (26) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர், 'மதுபானம் வாங்க காசில்லாததால், பெரியானிடம் 500 ரூபாய் கடன் கேட்டேன். அவர் தர மறுத்தார். மேலும், மது குடித்துவிட்டு ஏன் வெட்டியாக ஊர் சுற்றுகிறாய்? என அறிவுரை கூறினார்.
எனக்கு யார் அறிவுரை கூறினாலும் பிடிக்காது. பெரியான் பணம் கொடுப்பதற்கு பதிலாக அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்து, அவரை அடித்துக் கொன்றேன். அதைத் தடுக்க வந்த வெள்ளையம்மாளையும் அடித்துக் கொன்றேன்,' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2009ம் ஆண்டு தெப்பக்காட்டைச் சேர்ந்த ஜெயபால், மற்றொரு சரவணன் ஆகியோருடன் நானும் சேர்ந்து கொண்டு கூலி வேலை தேடி திருவாரூருக்குச் சென்றோம். அங்கு எனக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணனை கழுத்தை நெரித்துக் கொன்று, சடலத்தை அங்குள்ள காவிரி ஆற்றில் வீசி விட்டேன்.
இதையடுத்து நானும் ஜெயபாலும் ஏற்காடுக்கு வந்துவிட்டோம். இந்நிலையில், சரவணனை கொன்றது குறித்து அடிக்கடி என்னை ஜெயபால் மிரட்டி வந்தார். இதனால் அவர் என்றைக்கு இருந்தாலும் என்னைப்பற்றி காவல்துறையில் மாட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்தேன்.
இதனால் கடந்த 2011ம் ஆண்டு, ஜெயபாலையும் கொன்று விட்டேன். இதையடுத்து சரவணனை காவல்துறையினர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''ஜெயபால் கொலை குறித்து புகார் எதுவும் வரவில்லை. திருவாரூர் காவல் எல்லைக்குள் கடந்த பத்தாண்டுகளில் அடையாளம் தெரியாத சடலம் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தோம். அப்படி ஏதும் உறுதியான தகவல்கல் கிடைக்கவில்லை. அவர் நல்ல மனநிலையில்தான் உள்ளாரா என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும், இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.