நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், 'இந்த பகுதியில் நிறைய நூறு நாள் வேலை திட்டம் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மத்திய அரசிடம் வலியுறுத்தி கண்டிப்பாக குரல் கொடுப்பேன். விவசாய கடன், வட்டியில்லா கடன் சிந்தாமல் சிதறாமல் வந்தடையும். அதற்காக குரல் கொடுப்பேன். இந்த பகுதியில் இருக்கும் லம்பாடி இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுப்பேன்.
எனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் கண்டிப்பாக நானும் உங்களுக்காக குரல் கொடுப்பேன். குடிநீர் பிரச்சனையாக இருக்கட்டும், வேலை வாய்ப்பு பிரச்சனையாக இருக்கட்டும் எல்லாவற்றிற்காகவும் நான் குரல் கொடுப்பேன் என உறுதியாகச் சொல்கிறேன். பாரத பிரதமர் கிட்டயே நேரடியாக போய் கேட்கலாம். 108 ஆம்புலன்ஸ் 2005 ஆம் ஆண்டு கொண்டு வந்தவர் அன்புமணி ராமதாஸ். எங்களுடைய சின்னம் மாம்பழம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சகோதரியாக என்னையும் ஏற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்''என்றார்.