சிதம்பரத்தில் மாவட்ட ஆட்சியரின் கண் முன்னே ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவர் தாட்கோவில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் தன்னுடைய சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 50 செண்ட் இடம் மற்றும் வீட்டு மனைகளை இவரிடம் இருந்து அபகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தனது பெயரில் இருந்த சொத்துக்களையும் சில அதிகாரியின் உதவியோடு அவரது இரு மகன்களும் அவர்களது பெயரில் மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சம்பந்தம் சட்ட விரோதமாகத் தனது பெயரில் இருந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுக்களும் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய சொத்துக்களை மீட்டுத் தரக் கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தம் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் புதன்கிழமை சிதம்பரம் பகுதியில் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கண் முன்னே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் மற்றும் உதவியாளர் பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். மாவட்ட ஆட்சியர் கண் முன்னே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.