புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க எம்.எல்.ஏக்கள், தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பாக ஆறாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லிக்கு சென்றிருந்த கிரண்பேடி இன்று புதுச்சேரி திரும்பினார். மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்காக முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாராயணசாமியும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகவும் அது சமயம் மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்க தலைமைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பேச்சுவார்த்தையை ஆளுநர் மாளிகையில் வைக்காமல் தலைமைச் செயலகத்தில் வைக்க வேண்டும் என்றும், ஆளுநரின் ஆலோசகர் தேவநீதி தாஸ் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தார். பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நாராயணசாமி விதித்த நிபந்தனைகள் காரணமாக கிரண்பேடி பேச்சுவார்த்தையை ரத்து செய்து பொதுவெளியில் விவாதித்துக் கொள்ளலாம் என அறிவித்துவிட்டார்.
அதேசமயம் கிரண்பேடி கவர்னர் மாளிகை வளாகத்தில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். இதனால் போராட்டத்தில் இருந்த அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதனால் ஆறாவது நாளாக போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் "புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்" என்றும் கூறினார்.