திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தி.மு.க. சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (14.10.2023) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ‘சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கி பேசுகையில், “இந்தியாவின் தவப்புதல்வரான கலைஞரின் சாதனைகளை நினைவுகூர இங்குக் கூடியுள்ளோம். வாழ்நாள் முழுதும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர் கலைஞர். அரசியல் தலைவர், கவிஞர், பத்திரிகையாளர், முதல்வர், எழுத்தாளர், நிர்வாகி எனப் பல்வேறு சிறப்புகளை கொண்டவர் கலைஞர். மாநிலம், மொழி, சாதி, மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சமமாக பார்க்கக்கூடிய அருமையான தத்துவத்தில் மக்கள் நலனுக்காகச் சிந்தித்தவர் கலைஞர். பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கலைஞர்.
மரபு வழி சமூகம், ஆண் ஆதிக்க சமூகம், கலாச்சாரம் என்கிற தடைகளை எல்லாம் தாண்டி பெண்கள் சாதித்துள்ளனர். 1928இல் அரசியல் சாசன சட்ட வரைவை மோதிலால் நேரு தலைமையிலான குழு தயார் செய்து அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பின்னர் கராச்சியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் கராச்சி தீர்மானம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டும் பெண்கள் உரிமையைக் கொண்டாடுவதையும் பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது” எனப் பேசினார்.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கல்வி குறித்து பேசும்போது காமராஜரின் பெயரை சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கலைஞர் பெயரை குறிப்பிட்டார்கள். ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர், கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?” எனப் பதிவிட்டுள்ளார்.