திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் பொம்முலு கவுண்டனுரை சேர்ந்த விவசாயி மணிவேல் சொந்தமாக மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் தனது மாடுகளை நான்கு வழிச்சாலை பக்கம் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அதில் இருந்த ஜல்லிக்கட்டு மாடு திடீரென மிரண்டுபோய் மணிவேல் வயிற்றிலும், மார்பிலும் முட்டியது. இதனால் மணிவேல் குடல் சரிந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்படி இருந்தும் அந்த ஜல்லிக்கட்டுமாடு தொடர்ந்து மணிவேலை முட்டிக்கொண்டிருந்தது.
அதைக்கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். உடனே இந்த விஷயத்தை மணிவேலின் மகன் பூபதிக்கு தெரியப்படுத்தினார்கள். உடனே பூபதி சம்பவ இடத்திற்கு வந்து ஜல்லிக்கட்டு மாட்டின் பிடியில் இருந்த தனது தந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை துச்சமென மதித்து மாட்டின் கயிறை இழுத்து கட்டி தந்தையின் உயிரை காப்பாற்றினார்.
அதன்பின் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிவேலை அங்கு இருந்த மக்கள் ஆட்டோவில் ஏற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக வேடசந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இப்படி வளர்த்த காளையே மார்பில் பாய்ந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.