கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கோட்டையம் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் உதயகுமார்(35). இவருக்குத் திருமணமாகி பவித்ரா(24) என்ற மனைவியும் ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சென்னையில் வேலை செய்து வந்த உதயகுமாரின் மனைவி பவித்ரா சமீப நாட்களாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சச்சரவின் காரணமாக தாய் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.
இது, அவரது கணவர் உதயகுமாருக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று மாமியார் வீட்டிற்குச் சென்ற உதயகுமார், மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உதயகுமார் மாமியாருக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை தனது பெயரில் எழுதித்தர வேண்டுமென கேட்டு மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாமியார், மருமகனுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. கடும் கோபத்தின் காரணமாக உதயகுமார் திடீரென மாமியார் ராஜலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மருமகனிடமிருந்து மாமியார் ராஜலட்சுமியை காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து உதயகுமாரின் மனைவி பவித்ரா திருநாவலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.