தங்கள் மரணம் யாருக்கும் சுமையாக இருக்கக்ககூடாது என்பதற்காக இறுதி சடங்குக்கு தேவையான தொகையை தந்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்லடம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது சின்னகாளிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகனும், செல்வி மற்றும் சாந்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவனை இழந்த செல்வி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துரைராஜுடன் இருந்து வந்தனர். இளைய மகள் சாந்தி இடுவாய் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் துரைராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு துரைராஜ், செல்வி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அதில் துரைராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். செல்விக்கு உயிர் இருக்கிறது என்று அக்கம் பக்கத்தினர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் இடுவாய் கிராமத்தில் இருந்த இளைய மகள் சாந்திக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் பதறிப்போய் சின்னகாளிபாளையம் வந்துள்ளார். அப்போது அவர், இதுக்குத்தான் பணம் கொடுத்தியா? என்று கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
நேற்று திடீரென கோபாலகிருஷ்ணன் இடுவாய் கிராமத்திற்கு சென்று தங்கை சாந்தியிடம், ரூபாய் 30 ஆயிரம் கொடுத்துள்ளார். எதற்கு என்று சாந்தி கேட்டதற்கு, அவசர செலவிற்கு தேவைப்படும் என்று சொல்லியுள்ளார். மீண்டும் மீண்டும் சாந்தி கேட்டதற்கு, வைத்துக்கொள் அவசர செலவுக்கு தேவைப்படும் என்று சொல்லியுள்ளார். அண்ணன் இப்படி சொல்லும்போது மறுக்காமல் வாங்கிக்கொண்டுள்ளார் சாந்தி.
தங்கள் மரணம் யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என்று நினைத்த துரைராஜ், தனது மகன் கோபாலகிருஷ்ணனை விட்டு சாந்தியிடம் பணம் கொடுக்க சொல்லியிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. துரைராஜ் மகன், மகளுடன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள், தங்கள் சொத்த பணத்திலேயே இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்தது ஏன். அவர்களின் மன கஷ்டம் என்ன உள்ளிட்ட பல கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை.