Skip to main content

கைதான மாணிக்கம்! - அடுத்தடுத்து உயிரை மாய்த்த மகனும் மனைவியும்!  

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Son and wife lost their lives  while  father was arrested in a theft case
மாணிக்கம்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான பிரிதிவிராஜ், கடந்த 21 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது பூட்டப்பட்டிருந்த அவருடைய வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து யாரோ ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ. 2,60,000-ஐ திருடிச் சென்றுவிட்டார். பிரிதிவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, திருடிய நபர் குறிஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மலர் மன்னன் என்ற மாணிக்கம் (65) என்பதும், ஏற்கனவே அவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், மாணிக்கம் அவருடைய வீட்டில் இருந்தபோது, காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலையத்தில் தன்னுடைய தந்தை மாணிக்கத்தைப் பார்க்கச் சென்ற மகன் கர்ணன் (24), கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு, தந்தை  உட்கொள்ளும் மாத்திரைகளை எடுப்பதற்காக வீடு திரும்பிய நிலையில், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கர்ணனின் உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தந்தையிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையைப் பார்த்த அவமானத்தில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனப் பேசப்படுகிறது.

காவல்துறையினர் தனது மகன் கர்ணனை அடித்ததாகக் கூறிய தேவி (50) உடலை வாங்க மறுத்தபோது, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு முன்பாக, அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் கர்ணன் இருந்தபோது பதிவான சிசிடிவி  காட்சிகளை, கர்ணன் குடும்பத்தினருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர். அதனால் சமாதானமான கர்ணனின் அம்மா தேவி, மகன் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Son and wife lost their lives  while  father was arrested in a theft case
தாய் - மகன்

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தங்களது வாகனத்தில் தேவியை ஏற்றிக்கொண்டு, அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றபோது, அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி முன் இருக்கையில் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் தேவியும் அவருடைய உறவுக்காரப் பெண்கள் இருவரும் அமர்ந்துள்ளனர்.  கிளம்பியதிலிருந்தே தேவி போனில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். விருதுநகர் செல்லும் வழியில் பாலவநத்தம் அருகில், போலீஸ் வாகனத்திலிருந்து திடீரென தேவி வெளியே குதித்திருக்கிறார்.  அதனால், தலையில் பலத்த காயமடைந்து இறந்துவிட்டார்.

தேவியின் உடலும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை  மேற்கொண்டு வருகிறார். திருட்டு வழக்கில் தந்தை மாணிக்கம் கைதான நிலையில், மகன் கர்ணன் தற்கொலை செய்துகொண்டதும், மகனின் மரணத்தைத் தொடர்ந்து அவனுடைய அம்மா தேவி போலீஸ் வாகனத்திலிருந்து குதித்து உயிரிழந்ததும் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவங்களாக  உள்ளன.

காவல்துறையினரின் விசாரணை மிரட்டலால், கர்ணன் தூக்கிட்டு உயிரை விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தன்னுடைய அக்கா தேவி போலீஸ் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகவும் புகாரளித்துள்ள தெய்வேந்திரன், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்