கோயில் குருக்கள் வீட்டில் தூங்கும்போது இரவு நேரத்தில் கதவைத் தட்டிவிட்டு தப்பிச் செல்லும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கோவை மக்களிடையே திகிலை கிளப்பியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதிக்கு அருகே உள்ளது குளத்தூர் கிராமம். இந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் குருக்களாக இருந்து வருபவர் பிரபு. இவர் தனது குடும்பத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி, மாரியம்மன் கோவில் இருக்கும் இடம் சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்பு சுவருக்கு அருகாமையில் அரசு பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே குருக்கள் பிரபுவிற்கு வித்தியாசமான முறையில் தொல்லை கொடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் தடுப்பு சுவரை தாண்டி வரும் மர்மநபர்கள், குருக்களின் வீட்டு கதவை தட்டிவிட்டு ஓடி விடுவதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் இருப்பவர் வெளியே வந்து பார்க்கும்போது ஒருவரும் இருப்பதில்லை. இந்த சம்பவம் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது.
இதனால் பீதியடைந்த குருக்கள் பிரபு, “யாருனே தெரியலங்க.. இரவில் தூங்கும்போது கதவ தட்டுறாங்க.. வெளிய வந்து பாத்தா யாருமே இருக்க மாட்றாங்க” என அக்கம்பக்கத்தினரிடம் புலம்பியிருக்கிறார். அப்போது, இதை கேட்டவர்கள், “எங்களோட வீட்லயும் இதே பிரச்சனை தான்” என திகிலாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குருக்கள் பிரபு இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட சூலூர் போலீசார், பிரபுவின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் இரவு நேரத்தில் பள்ளிக்குள் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் வழிப்பறி, செல்போன் பறிப்பு என பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுவருவதால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.