கன்னியாகுமரியில் பெற்ற தாயே குழந்தைக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகா-ஜெகதீஸ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையான சரண் விஷப்பொடியை சாப்பிட்டுவிட்டதாக வேலைக்கு சென்றிருந்த கணவன் ஜெகதீஸிடம் கார்த்திகா கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு வயது குழந்தை சரண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரண் மட்டுமில்லாது மூன்று வயது பெண் குழந்தை சஞ்சனாவிற்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக பெண் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெகதீஸின் உறவினர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிறுவன் சரணின் உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் விஷப்பொடியை சாப்பிட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாத நிலையில் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அப்பொழுது தாய் கார்த்திகாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது மராயபுரம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவருடன் அதிகம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுனில் என்ற அந்த நபருடன் முறையற்ற தொடர்பிலிருந்த கார்த்திகா தனக்கு திருமணமான விஷயத்தை மறைக்க குழந்தைகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக எலி மருந்தை வாங்கி வந்து குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடும் உப்புமாவில் கலந்து கொடுத்துள்ளார். இதனை மூன்று வயது பெண் குழந்தை அதிகம் சாப்பிடாத நிலையில் விஷம் கலந்த உப்புமாவை அதிகம் சாப்பிட்ட இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் விஷப்பொடியை குழந்தை சாப்பிட்டதாக தாய் கார்த்திகா நாடகமாடியதும் அம்பலமானது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடூர தாய் கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.