மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்கியது. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், '' இந்த செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தான் காரணம். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் அனைத்து வீரர்களையும் வரவேற்கிறேன். ஒடிஷாவின் பழங்குடியின பெண்ணான முர்முவை ஜனாதிபதியாக்கி மிகப்பெரும் சாதனை புரிந்தவர் பிரதமர் மோடி. இதனால் சமூக நீதி காவலராக பிரதமர் மோடி திகழ்கிறார்'' என்றார்.