தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்ட மருதுதுவ குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர். 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்களும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர். பின்னர் நேற்று தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்னோலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.