தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னக்கோவிலாங்குளம் கிராமத்தின் பாலசுப்பிரமணியம் சிறைக்காவலர் பணியிலிருப்பவர். நேற்று முன்தினம் காலையில் அவரது பிள்ளைகள் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது பெற்றோர் வீட்டு வாசலில் இருந்த ஷூவை எடுத்து காலில் மாட்ட முயன்றனர். அப்போது அதன் உள்ளே ஏதோ நெளிவதைக் கண்டு அதிர்ந்தவர்கள் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு அலறியிருக்கிறார்கள்.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான பரமேஸ் தாஸ் ஷூலிருந்த பாம்பை ஜாக்கிரதையாகப் பிடித்து அந்தப் பகுதியில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டிருக்கிறார். இந்த நிலையில் குழந்தையின் ஷூவில் பாம்பு பதுங்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வீட்டின் வெளியே ஷூ இருந்ததால் குளிருக்காக பாம்பு ஷூவுக்குள் பதுங்கி முடங்கியிருக்கிறது. தெரியாமல் குழந்தைக்கு மாட்டியிருந்தால் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதியினர்.
அவசர கதியில் செயல்பட்டதால் குழந்தைக்கு மாட்டப்பட்ட ஷூவினுள்ளிருந்த தேள் கொட்டி குழந்தை மரணமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே, பெற்றோர்களே பள்ளிக் குழந்தைகளுக்கு ஷூ மாட்டிவிடும் முன்பு முன்னெச்சரிக்கையாக அதனைத் தட்டிப் பார்த்தும் பொருட்களை சோதித்தும் பயன்படுத்தினால் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
விலை மதிப்பில்லா உயிர், போனால் திரும்ப வரவே வராது.