கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, கோமுகி ஆறு என்ற இரு ஆறுகளும் கடலூர் மாவட்டம் நல்லூர் அருகே ஒன்றாக இணைந்து மணிமுத்தாறு என்ற பெயரில் வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. சமீப நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், வேப்பூர் அருகே உள்ள ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேப்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் நேற்று ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசி உள்ளனர். அந்த வலையை இழுக்கும்போது வலை மிகவும் கனமாக இருந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இளைஞர்கள் வலையில் நிறைய மீன்கள் சிக்கி இருப்பதாக வலையை கரைக்கு இழுத்துச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வலையில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இது குறித்த தகவலை வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வலையில் சிக்கி இருந்த மலைப் பாம்பை மீட்டு வனத்துறைக்குச் சொந்தமான காப்பு காட்டில் விட்டுச் சென்றுவிட்டனர். "கல்வராயன் மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த மலைப்பாம்பு ஆற்றுக்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம்" என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மீன் வலையில் மலைப் பாம்பு சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.