பாலிகீட்ஸ் கிலோ ரூ.3000 என்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு விபரீதம் தெரியாமல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரமாகவும், கடலரிப்பை தடுக்கும் அலையாத்திக் காடுகளின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் அதிசய உயிரினமான "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சதுப்பு நிலத்தில் தோண்டி எடுத்து சென்னைக்கு கடத்த முயன்ற 8 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'பாலிகீட்ஸ்' கடற்கரைப் பகுதியில் கடலரிப்பை காக்கும் சதுப்பு நிலப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் ஆதாரம் இந்த "பாலிகீட்ஸ்" எனப்படும் மண்புழுக்களே.!! இவ்வகை அலையாத்திக்காடுகள், மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் அதிகம். இத்தகைய காடுகளில் வாழ்ந்து வரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் மண்ணை சீர்ப்படுத்தி ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்கிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அதுபோக "பாலிகீட்ஸ்" இருக்குமிடத்தில் இறால் மற்றும் மீன்கள் வளம் நிறைந்தே காணப்படும்.
இயற்கையான உணவாய், மிகுந்த வளர்ச்சியைத் தரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் பண்ணையிலுள்ள வளர்ப்பு இறாலின் வளர்ச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு மிகுந்த அளவில் கடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில், மண்புழுக்கள் தோண்டி எடுத்து கடத்தப்பட்டால் ஈரத்தன்மை இல்லாமல் அலையாத்திக் காடுகள் உள்ள இடம் கடினமாகி இதனால் கடலரிப்பு எளிதில் நடக்கும் என்பதால் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் வேட்டையாடுதலை வனத்துறை தடைச்செய்துள்ளது. எனினும், ஆங்காங்கே கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது இல்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வளையர்வாடி பகுதியில் இருந்து "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வளையர்வாடி பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டி பெட்டியாக 5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை கைப்பற்றி, கடத்தலில் ஈடுப்பட்ட கடலூரை சேர்ந்த பெருமாள், செங்கேணி, விஜய், ராயர், சுப்பிரமணியன், சந்திரன், கோபி மற்றும் கார்த்திக்கேயன் உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது வனத்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.