![Sivashankar Baba remanded in court custody!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ILGJAzDzWQqV0wNVlsBKPM9iobw5yFwRCM3I9CDGIOM/1626156225/sites/default/files/inline-images/n9.jpg)
முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சிவசங்கர் பாபா இன்று (13.07.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின்கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆலோசனை நடத்திவந்தனர்.
3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுநர்களுடன் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சி.பி.சி.ஐ.டி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், புழல் சிறையில் உள்ள அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இன்று ஆஜரான சிவசங்கர் பாபாவை வரும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.