Skip to main content

சிவசங்கர் பாபா பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

SIVASANKAR BABA SCHOOL CHILD WELFARE SUGGEST TO TN GOVT

சர்ச்சையில் சிக்கிய கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்துச் செய்ய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

 

அந்த பரிந்துரையில், "செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி உண்டு உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம், பாலியல் புகாருக்குள்ளான் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

 

மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ (POCSO) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில், சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கின் தன்மையைக் கருதி தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. (CBCID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இதனிடையே, இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படிப்பினைத் தொடர விருப்பமில்லாமல் மாற்று சான்றிதழைப் பெற்று வேறு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் சேர்த்திட கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும், இப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசினை மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்