
தமிழக சட்டப்பேரவையில் இன்று (26-04-25) ஆதி திராவிடர் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, கேள்வி நேரம் ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
அதில் அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி எழுந்து, ‘சட்டப்பேரவைத் தலைவர் அவர்களே, கை தூக்கி கை தூக்கி கையே வலிக்குது பேரவைத் தலைவரே’ என்று கிண்டலாகப் பேசினார். உடனே சபாநாயகர் அப்பாவு, “இப்படி எல்லாம் பேசக்கூடாது, ரவி உட்காருங்க...கை சுகமான பிறகு நான் கூப்பிடுறேன்” என்று பேசினார்.
இதையடுத்து அவை முன்னவரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் எழுந்து பேசுகையில், “உறுப்பினர்கள் கேள்வி நேரத்திலே துணை கேள்வி கேட்பதில் தவறுல்லை. அதுக்காக தான் கேள்வி நேரம் ஆரம்பிச்சிருக்கோம். ஆனால் சில நேரங்களில் நீங்கள் எப்படி கொடுப்பீர்கள் என்று தெரியும். அதனால் எதிர்கட்சியில் இருக்கிற நண்பர்களுக்கு, அதிகமான கேள்வி கொடுக்க வேண்டும் என்று நானே கூட சொல்லிருக்கேன். ஆனால் அதற்காக ஒவ்வொருவரும் எழுந்து நின்று சபாநாயகரை நையாண்டி செய்வது மரபல்ல. இது சாதாரணமா இருக்கலாம். ஆனால், உட்கார்ந்திருக்கிற இடம் மாண்பை காக்கும் இடம். எனவே அருள் கூர்ந்து நையாண்டி செய்யக்கூடாது” என்று கோபமாகப் பேசினார்.