அரசு ஊழியராக இருந்தாலும் பெண் என்றால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது. சிவகாசியிலும் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.
விருதுநகர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய காளிராஜன் வேலையில் இருக்கும்போதே இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவரது மகள் முத்து கவுசல்யாவுக்கு சிவகாசி நகராட்சியில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். அதே சிவகாசி நகராட்சியின் இ1 கிளார்க் செந்தில்முருகனையும் காணவில்லை. அரசுப் பணியை அம்போவென விட்டுவிட்டு இருவரும் சென்றதால் இ1 செக்ஷனில் எந்த வேலையும் நடக்கவில்லை. செந்தில்முருகனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவர் வீட்டிலும் தேட ஆரம்பித்தனர். ஒருவாரத்துக்குப் பிறகு சாத்தூரில் இருவரும் பிடிபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், முத்துகவுசல்யாவுக்கு உதவுவதுபோல் நடித்து பாலியல் தொந்தரவு தர ஆரம்பித்த இ1 கிளார்க் செந்தில்முருகன் 16-6-2018 அன்று முத்துகவுசல்யாவின் வீட்டுக்கே சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நடந்ததை வெளியில் சொன்னால், வேலையைத் தொலைத்து விடுவேன் என்று 18-6-2018 அன்று வேலை செய்துகொண்டிருந்த முத்துகவுசல்யாவை மிரட்டி கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் சில ஊர்களுக்கு அழைத்துச்சென்று விடுதிகளில் அறை எடுத்துத் தங்கி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததாகவும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவதாக மிரட்டியதாகவும் முத்துகவுசல்யாவிடம் இருந்து புகார் பெறப்பட்டு சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் செந்தில்முருகன்.
சிவகாசி நகராட்சி வட்டாரத்திலோ, “பாவம்ங்க அந்தப் பொண்ணு. இப்பத்தான் புதுசா வேலைக்கு வந்துச்சு. நல்லா வேலை பார்த்துக்கிட்டிருந்த அந்தப் பெண்ணை எப்படியோ பேசி மயக்கி, கரெக்ட் பண்ணிட்டான் செந்தில்முருகன். முத்துகவுசல்யாவும் இவனுக்கு பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கிறது தெரிந்தும் இவன் விரிச்ச வலையில் விழுந்துட்டா. கவர்மெண்ட் வேலையில் இருந்துக்கிட்டு, சபலத்துக்கு இடம் கொடுக்கலாமா? இதுக்கா இவங்களுக்கு சம்பளம் கொடுக்குது அரசாங்கம்? இப்ப பாருங்க ரேப் கேஸ்ல உள்ள தள்ளிட்டாங்க.” என்று ‘உச்’ கொட்டுகிறார்கள்.
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தால், சட்ட நடவடிக்கை பாயும் என்பது தெரிந்தும், அத்துமீறுகிறார்களே சில ஆண் ஊழியர்கள்?