கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்து சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கார் வெடிப்பு சம்பவத்திற்கு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் தினமும் ஓரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் சராசரியாக எட்டு முதல் பத்துக் கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள திமுக அரசிற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனம். தமிழக மக்களை வன்முறையாளர், தீவிரவாதி, பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை. கோவையில் கார் வெடித்த இடத்தை டி.ஜி.பி.யே நேரில் சென்று ஆய்வு செய்கிறார் என்றால் பின்னணியில் ஏதோ இருக்கிறது. 1998ல் திமுக ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கோவையில் கார் வெடித்த சம்பவம் நினைவூட்டுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.