சிவகாசியில் காங்கிரஸ் மேயர் என்ற நினைப்பை முளையிலேயே கிள்ளிவிட்ட நிலையில், நாடார் சமுதாயத்தவரை மேயராக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பலனாக, சங்கீதாவை சிவகாசி மாநகராட்சியின் மேயர் நாற்காலியில் அமரவைத்த திமுக, தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரியாவை துணை மேயராக்கி இருக்கிறது. அதேநேரத்தில், கட்சியினரிடம் பரவலான அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது. காரணம், சிலரது எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான்.
அந்த திமுக சீனியர் “கட்சிக்காக உழைத்தவர்களெல்லாம் கானல் நீராகிப்போக, எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் திடீர் நதியாக மாறிப்போனது ஏனோ? அமாவாசைகளை உருவாக்கிவிட்டனரே! அகழ்வாராய்ச்சியை நிலத்தில் நடத்துவதெல்லாம் சரிதான். அத்தகைய ஆய்வு மேயர் தேர்வில் காணப்படவில்லையே? இது தலைமையே எடுத்த முடிவு என்று பொய் சொன்னால், யாரும் நம்புவதற்கில்லை.” என்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை ஒரு பிடிபிடித்தார்.
நாடார் சமுதாயத்தில் பாரம்பரியமுள்ள பெரும் செல்வந்தர்களை மட்டுமே ஏற்கும் மனநிலைகொண்ட சிவகாசியில், மேயர் சங்கீதாவின் கணவர் இன்பம் அதே சமுதாயத்தவராக இருந்தும், அந்நியராகப் பார்க்கப்படுகிறார். சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா போன்றவர்களோடு தொடர்பில் உள்ள இன்பத்தின் பிம்பத்தை பலரும் ரசிக்கவில்லை. தொழிலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சிவகாசி, யாராலும் ரவுடி ராஜ்ஜியம் ஆகிவிடக்கூடாது என்ற பீதி வெளிப்படுகிறது. அதனாலோ என்னவோ, துணை மேயர் விக்னேஷ் பிரியா பதவியேற்றபோது வெளிப்பட்ட சமுதாய ரீதியிலான ஆரவார ஆதரவை, சங்கீதா பதவியேற்றபோது காணமுடியவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்ட மேயர் பதவியேற்பு நிகழ்வில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனும் சுத்தமாக மிஸ்ஸிங்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் எதிர்பார்ப்போடுதான் காங்கிரஸிலிருந்து விலகி திமுகவுக்கு வந்தார். தன்னை துணை மேயர் ஆக்குவார்கள் என்ற அவரது நம்பிக்கை பொய்த்துப்போனது. முன்னாள் திருத்தங்கல் நகர்மன்றத் துணைத்தலைவர் (அதிமுக) பொன் சக்திவேலின் கவுன்சிலர் மனைவி அழகுமயிலுக்கு துணை மேயர் பதவியைப் பெற்றுத் தருவோம் எனத் தூபம் போட்ட சிலர் ‘ராஜேந்திரபாலாஜியின் தீவிர விசுவாசிகளான அத்தனைபேரும் அவரைத் தனிமரமாக்கிவிட்டு மொத்தமாக திமுகவுக்கு வருவதால், திமுக தலைமையின் மனம் குளிரும். அதனால்தான் இது சாத்தியம்.’ என்று நம்பிக்கையூட்டி பொன் சக்திவேல், சீனிவாசன், பலராமன் உள்ளிட்டோரை, இரட்டை இலையில் வெற்றிபெற்ற 9 கவுன்சிலர்களோடு திமுகவுக்கு அந்தர் பல்டி அடிக்கவைத்தனர். கடைசியில் அழகுமயிலுக்கு கிடைத்தது அல்வாதான். மேயர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத கம்மவார் சமுதாயத்தினரிடமும் அதிருப்தி நிலவுகிறது.
‘இந்த சங்கீதாவும் இன்பமும் யார்? கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. எப்படித்தான் தேடிப்பிடித்தார்களோ? ரூ.6 கோடி கைமாறியதாம்?’ என்ற திமுகவினரின் பொதுவான குமுறலை, மேயர் சங்கீதாவிடம் கூற முயன்றபோது, ‘காதலுக்கு மரியாதை’ தருபவர் எனச் சொல்லப்படும் கணவர் இன்பம் லைனில் வந்தார். “காங்கிரஸ் எங்க கூட்டணி கட்சிதான். ஆனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், சங்கீதா தோற்கணும்னு உள்ளடி வேலை பார்த்தார். சங்கீதாவுக்கு மேயர் சீட் கிடைக்கிறதுக்கு நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் அண்ணனும் ஸ்டெப் எடுத்தார். நான் பரம்பரை பணக்காரன் கிடையாது. நாலு பேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க. எங்க கட்சிக்குள்ள போட்டியும் பொறாமையுமா இருக்கு. யாரும் புதுசா கட்சிக்குள்ள வந்து விடக்கூடாது. யாருக்கும் பதவி கிடைத்து விடக்கூடாது. இதுலயே குறியா இருக்காங்க. இப்ப எனக்கு எதிரா ரவுடிங்கிற ஆயுதத்தை கையில எடுக்கிறாங்க. எந்த ஆதாரமும் இல்லாம குற்றம் சுமத்துறாங்க. யாரையும் வாழவைத்துத்தான் எங்களுக்கு பழக்கம். மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கோம். மேயராகி சம்பாத்தியம் பண்ணனும்கிற எண்ணம் துளியும் இல்ல. ஆண்டவனுக்கு பொதுவா சொல்லுறேன், என் மனைவி சங்கீதாவை மேயர் ஆக்கணும்னு சொல்லி யாருக்கும் பத்து பைசா கூடா கொடுக்கல.” என்றார்.
மேயர் சங்கீதாவோ “சிவகாசி மக்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்த்துவைப்பேன். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.