தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த 10- ஆம் வகுப்பு மாணவனை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது கஞ்சா வியாபாரி டீம் ஒன்று. கொலைக்கான பின்னணியாக நில அபகரிப்பு சம்பந்தமான விவகாரம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் இந்திரா தம்பதியினர். வாகன ஓட்டுநரான வேல்முருகன் தற்பொழுது ஈரோட்டிலும், இந்திரா சிவகங்கையிலுள்ள தாய் சேய் நல மருத்துவமனையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஒரே மகனான ராஜேஷ் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தினமான நேற்று (26/05/2020) மதியம் தனது நண்பர்களுடன் வாணியங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேசிக்கொண்டிருக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் கொடிக்கட்டும் பறக்கும் கஞ்சா வியாபாரியான குதாம்சேகர் தன்னுடைய தலைமையில் தயாநிதி, தம்பிதுரை, விக்னேஷ், மருதுபாண்டி, வெற்றிவேல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலுடன் பட்டா கத்தி, அரிவாள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு ராஜேஷைத் தாக்கியுள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட ராஜேஷ் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி கிராம மந்தை திடல் வழியே ஓடியிருக்கின்றார். எனினும் விரட்டி வந்த கஞ்சா வியாபாரி டீம் அங்கேயே வைத்து உடலெங்கும் பட்டாக்கத்தியால் வெட்ட சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் 10- ஆம் வகுப்பு மாணவன் ராஜேஷ். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை டவுண் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,
இதே வேளையில், கொலையுண்ட ராஜேஷ் குடும்பத்தாருக்கும், கஞ்சா வியாபாரிக்கும் நில அபகரிப்பு சம்பந்தமாகத் தகராறு இருந்ததாகவும், இது சம்பந்தமாக இரு தரப்பிலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல் கூறுகின்றன. இதுவும் கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணையைத் துவக்கியுள்ளது காவல்துறை. எனினும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிவகங்கை மானாமதுரை சாலை அருகில் பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.