தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை இந்த வருடம் எவ்விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாட்டு பொங்கல் திருநாள் ஆண்டு சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள சலுகை புரத்தை சேர்ந்த மக்கள் வினோதமான முறையில் கொண்டாடியுள்ளனர். இங்கு வசிக்கும் மக்களின் காவல் தெய்வங்களாக பச்சை நாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் 15 நாட்கள் விரதம் மேற்கொண்டு வளையல், மெட்டி, கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களை தவிர்த்து வெள்ளை சேலையில் பொங்கல் வைத்து தங்களது காவல் தெய்வங்களை வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி, பாலடி கருப்பு உள்ளிட்ட காவல் தெய்வங்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று சாமியார் அருள்வாக்கு சொல்வதையும் அதனைத் தொடர்ந்து பெண்கள் ஒரே அளவிலான கலயத்தில் பால் எடுத்து ஊர்வலமாக வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதில் நம் முன்னோர் காலம் தொட்டு அனைவரும் சமமாக தெரிய வேண்டும் என்பதற்காக, ஏழை பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இருக்க கூடாது என்பதற்காக, இத்தகைய சடங்குகள் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும், வெள்ளை சேலை உடுத்துவது தங்கள் வீடுகளில் இருக்கும் கெட்ட சக்திகள் விரட்டப்படும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து, அந்த ஊர்மக்கள் கூறும் போது, " ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்க கூடாதுனு தான், நாங்க வெள்ள சேலை கட்டிக்குறோம். எங்க முன்னோர் காலத்திலிருந்து, இந்த சடங்கை செஞ்சிட்டு வறோம். இது அவங்க எங்களுக்கு கொடுத்த வரம்" என வியப்பாக பேசியுள்ளனர்.