Skip to main content

மர்ம மரணத்திற்கு காரணம்... மாணவர்களா? ஆசிரியர்களா? விசாரிக்காமலேயே வழக்கை முடித்த காவல்துறை?

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் மர்ம மரணத்தில், "பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியர் திட்டினார்" என்று ஒரு தரப்பினரும், "சக மாணவர்கள் கேலி செய்தார்கள்" என மற்றொரு தரப்பினரும் ஒருவரையோருவர் குற்றஞ்சாட்டிய நிலையில், விசாரணையை முழுதாக நடத்தாமலே மாணவனின் மர்ம மரணத்தை தற்கொலை என பதிவு செய்து வழக்கை முடித்துள்ளது காவல்துறை.
 

sivagangai district kundrakudi school student 10th std incident police

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேயன்பட்டியினை சேர்ந்தவர்கள் பொன்னழகு- கவிதா தம்பதியினர். இவர்களின் மூத்த மகன் அபிசேக் கலைக்கல்லூரியில் முதலாமாண்டும், இளைய மகன் அசோக் அருகிலுள்ள ஓ.சிறுவயலிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்புமாக கல்வி பயின்று வருகின்றனர். இதில் இளையமகன் அசோக் முதல்நாள் மாலைவேளையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காலையில் பள்ளி அருகிலுள்ள பயன்பாடற்ற கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.


குன்றக்குடி காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் விசாரணையை தொடங்கியவர்கள், " இறந்த அசோக் பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், மாணவனின் நடத்தைக் குறித்து ஆசிரியர் பெற்றோர்களை பள்ளி அழைத்து வரக் கூறியிருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்." என மேற்கொண்டு விசாரிக்காமலேயே பொதுவானக் காரணம் கூறி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது குன்றக்குடி காவல்துறை. இதனையே கூறி பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டது தனிக்கதை.
 

 

sivagangai district kundrakudi school student 10th std incident police

"பத்தாம் வகுப்பு ஆ பிரிவு படிக்கும் அசோக் படிப்பில் மிகக் கெட்டி. அத்தோடு ஒழுக்கமானவன். அதனைக் கருத்தில் கொண்டே அவனுடைய வகுப்பிற்கு அவன் வகுப்பு தலைவராக்கியுள்ளார்கள். அவன் வகுப்பு தலைவரானதிலிருந்தே, தொடர்ந்து அவனை குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் மிரட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதில் அசோக்கின் ஐடி கார்டை பறித்தும், டேக்கை அறுத்தும், படத்தை கிழித்தும் உள்ளனர். அதுபோக, இவனுடைய குரல் மென்மையாக இருந்ததால் அதனையும் சேர்த்து கேலி செய்துள்ளனர். அந்த கேலி, தொடர் மிரட்டல் இவைகளால் பயம் கொண்டு கணிதத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றான்.


ஆனால், பெயில் இல்லை. மதிப்பெண் குறைவானதால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச்சொல்லியுள்ளனர். வெளியில் மாணவர்களைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகிவிடும், ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் கூற முடியாத நிலை. இவைகளால் கூட அவன் இந்த முடிவினை எட்டியிருக்கலாம். போலீஸிடம் விபரம் கூறினோம். போலீஸ் அதனைக் கொண்டு கொள்ளவே இல்லை. இப்பொழுது கண்டு கொள்ளவில்லை எனில் அசோக்கின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்." என்கின்றனர் அசோக்கின் உறவினர்கள். இதே வேளையில், அந்தப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை நடந்து வருவதும் சகஜமான ஒன்று என்பதனையும் மறந்துவிடக்கூடாது. 


 

 

சார்ந்த செய்திகள்