கடந்த 1ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியில் லலிதா ஜுவல்லரி இடது பக்க சுவற்றைத் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 13 கோடி நகைகளைத் திருடிச் சென்ற இந்தச் சம்பவத்தில் ஆரம்பத்தில் வட இந்திய கொள்ளையர்கள் தான் எனத் திருச்சி போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தத நிலையில் ஒரு புதுக்கோட்டையில் வட இந்திய கும்பல் தங்கியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நள்ளிரவில் புதுக்கோட்டை டைமண்ட விடுதியில் சுற்றிவளைத்து விசாரித்தபோது திருச்சி கொள்ளைக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிந்த நிலையில்தான் திடீரெனத் திருவாரூர் பகுதியில் வாகன சோதனையில் மணிகண்டன் என்பவர் நகையுடன் சிக்கியதும், ஒரு மர்ம நபர் தப்பியோடியதும் இந்த வழக்கில் புதிய திருப்பமாக அமைந்தது.
சிக்கிய மணிகண்டனும் தப்பியோடிய சுரேஷ் ஆகியோர் திருவாரூரை சேர்ந்த தென்னிந்தியாவை அதிரவைத்த கொள்ளையன் முருகனின் உறவினர் என்பது தெரிந்ததும் தமிழகப் போலீஸ் தலைமை அதிர்ச்சியடைந்தது. குறிப்பாகத் திருச்சி போலீஸ்க்கு இன்னும் டென்ஷன் ஆனது.
பிடிபட்ட மணிகண்டனை வைத்துச் சுரேஷ் பிடிக்க முயன்றபோது சுரேஷ் தன் மனைவியுடன் தப்பித்த நிலையில் வேறுவழியில்லாமல் மணிகண்டன் மற்றும் சுரேஷ் அம்மா கனகவள்ளி ஆகியோரை மட்டும் சிறையில் அடைத்தனர்.
கொள்ளையர் கும்பல் தலைவன் முருகன் இதுவரை தென்னிந்தியா முழுவதும் 100 கிலோவுக்கு மேல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா எனப் பல்வேறு மாநிலங்கலில் நகைகளை கொள்ளையடித்திருந்தாலும் இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையடித்தவுடன் திருவாரூர், பாண்டிச்சேரி, மும்பை, ஹைதராபாத், ஆந்திரமாநிலம், கிஷ்மத்பூர், ஹிம்யஸ்த்சாகர், ஷம்ஷாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனக்குச் சொந்தமான சொகுசு பங்களா போய்த் தங்கிவிடுவான். இல்லை என்றால் தமிழகப் போலீசாரின் சில முக்கிய அதிகாரிகள் துணையோடு தமிழகத்தில் சுகமாகச் சுற்றி வந்திருக்கிறான்.
இந்நிலையில் தமிழகத்திலே அதுவும் திருச்சியில் 13 கிலோ கொள்ளை நகை அடித்தது தமிழகப் போலீசுக்கு கொள்ளையன் முருகனை கட்டாயம் பிடிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அவன் நகைகளைக் கொள்ளையடிப்பதே சில முக்கிய நகைக்கடை தொழில் அதிபர்களின் விருப்பத்திற்காகவும் கொள்ளையடித்து அவர்களிடம் கொடுத்துள்ளான். இதனால் அவர்கள் மூலம் தமிழகக் காவல்துறையில் முக்கியப் புள்ளிகள் பலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். செல்போன் இல்லாமல் வலம் வரும் கொள்ளையன் முருகனை நெருங்குவது என்பது தமிழகப் போலீசுக்கு பெரிய சவலாகவே இருக்கிறது.
இந்நிலையில் திருச்சி மாநகரத் துணை ஆணையர் மயில்வாகனன் எப்படியாவது கொள்ளையன் முருகனை பிடித்துவிட வேண்டுமென்று தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் போலீஸாரின் தீவிரமான கெடுபிடிகள் மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாய் கனகவள்ளி, முருகனின் அண்ணன் மகன் முரளி, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாறன் என்கிறவரை விசாரணை செய்து பின்னர் அனுப்பிவைத்தனர்.
திருச்சி மாநகரத் துணை ஆணையர் மயில்வாகனன்
முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் உறவினர்கள் 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தால் உறவினர் மீது உள்ள பாசத்தில் முருகன் மற்றும் சுரேஷ் வெளியே வர அல்லது பதுங்கி இருக்கும் இடம் தெரிய வாய்ப்பு இருக்கிறது என்று உறவினர்கள் ஒருவரையும் விடாமல் விரட்டி விரட்டி பிடித்துச் சிறையில் அடைத்த நிலையிலும் உறவினர்கள் தனக்குச் சிறை செல்வதைப் பற்றி எல்லாம் முருகன் மற்றும் சுரேஷ் கவலைப்படாமல் தலைமறைவாகப் பதுங்கி இருக்கிறார்கள்.
எப்போதும் இப்படி மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் பதுங்கி இருப்பார்களாம். இவர்கள் இரண்டு பேருக்கும் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்பதால் திருச்சி போலீஸார் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற விதத்தில் திக்குத் தெரியாத காட்டில் முருகனையும், சுரேஷையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.