தொடர்ச்சியாய் நடைப்பெற்று வந்த கொள்ளைகளுக்கு முடிவுக் கட்டும் விதமாக, கிழக்குக் கடற்கரை சாலையில் பயணம் செய்த பீரோ புல்லிங் கொள்ளையர்களை காரில் சேசிங் செய்து பிடித்து மக்களின் பயத்தை போக்கியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கொள்ளைகள் நடத்தப்பெற்று மக்களின் நிம்மதியை குலைத்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி பூட்டப்பட்டிருந்த தன்னுடைய வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு 194 பவுன் தங்க நகைகளும், ரொக்கப் பணம் ரூ.4 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்தார் காரைக்குடி மகர் நோன்பு திடல் பகுதியினை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் இளங்கோமணி.
ஊடகங்களும் காவல்துறையின் செயல்பாட்டை விமர்சித்த நிலையில், இத்தோடு கொள்ளை என்பது நமது பகுதியில் இருக்கக் கூடாது என்பதற்காக பழைய க்ரைம் டீமை தவிர்த்து புத்திசாலித்தனமாய் தன்னுடைய தலைமையில் காவல் நிலையப் பணியிலிருந்த காரைக்குடி தெற்கு காவல் நிலைய எஸ்.ஐ. தவமணி, வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ. தினேஷ், சோமநாதபுர காவல் நிலைய எஸ்.ஐ. பார்த்தீபன் உள்ளிட்ட மூன்று எஸ்.ஐ.க்கள் கொண்ட தனிப்படை டீமை களத்தில் இறக்கினார் டி.எஸ்.பி.அருண் குமார். இவர்களுக்கு உறுதுணையாய் 8 போலீஸார் இருக்க, ஒரு வாரமாக வீடு பூட்டியிருந்த நிலையில் குற்றச்சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்று? எனும் அடிப்படை கேள்வியினை கொண்டு இயங்கிய தனிப்படை டீம் சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்தும், தஞ்சாவூர், கொள்ளிடம், துறையூர், திண்டுக்கல் என ஏறக்குறைய ஆயிரக்கணக்கான கி.மீ. பயணம் செய்தும் முதலில் தோல்வியையே தழுவியிருக்கின்றது இந்த டீம்.
சோர்வடைந்த டீமிற்கு மாவட்ட நிர்வாக தரப்பிலிருந்து உத்வேகம் அளிக்கப்பட, இந்த முறை தனிப்படை டீமே, தனித்தனியாக பிரிந்து ஒவ்வொருவரும் இலக்கை நோக்கி முன்னேறுகையில், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியினை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிசிடிவி-க்களை ஆய்வு செய்திருக்கின்றது எஸ்.ஐ. தினேஷ் தலைமையிலான டீம். அதில், போர்டு பியஸ்டா வகையிலான TN21H- 3402 என்ற எண் கொண்ட கார் சந்தேகத்திற்குரிய வகையில் சம்பவம் நடந்த பகுதிகளான, ஆரிய பவன் பகுதி, சூடாமணிபுரம் பகுதிகளில் சுற்றி திரிந்ததும், மீண்டும் கொள்ளை நடந்த பகுதிக்கே வந்ததும் தெரியவர, மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட சேசிங்கிற்கு பிறகு கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து 120 பவுன் தங்க நகைகளை மட்டுமே மீட்டதோடு மட்டுமில்லாமல் மேற்கொண்டு எந்தெந்தப் பகுதியில் கொள்ளையடித்துள்ளனர் எனவும் விசாரித்து வருகின்றனர். இந்த பீரோ புல்லிங் கொள்ளையர்களை கோயம்புத்தூர் காவல்துறையும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
பீரோ புல்லிங் கொள்ளையர்கள் யார்? சிக்கியது எப்படி?
"முதலில் சம்பவம் நடந்த தேதியினை கண்டுபிடிக்கத் தான் சிரமமானது. புகார் கொடுத்தது, கடந்த மாதம் 15ம் தேதி அன்றைய தினத்திலும், அதற்கு முதல் நாளிலும் சந்தேகப்படும்படியாக எந்த தடயமும் கிடைக்கவில்லை. அந்த வீட்டின் சிசிடிவியும் வேலை செய்யவில்லை என்பதும் பின்னடைவையே தந்தது. இருப்பினும் சந்தேகப்பட்ட காரைக் கொண்டு, அந்த கார் கடந்து சென்ற பகுதிகள், நின்ற பகுதியினைக் கொண்டு சம்பவம் நடந்தது 13ம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு என முடிவு செய்தோம். அதனை அடிப்படையாக கொண்டே இயங்கினோம்.
காருக்கு சொந்தக்காரன் மதுரை என தெரியவர பழங்காநத்தம் பகுதியில் மெக்கானிக்காக இருக்கும், காரை விற்ற ராமன்- லட்சுமணணை பிடித்து விசாரிக்கையில், காரை விற்றது தான் என்றும், அந்த காரின் எண்ணின் போலி என்றும் கூறி காரை வாங்கி சென்ற ஆணையூர் அகதிகள் முகாமிலுள்ள சிவராசன், அவனது தம்பி அன்புக்குமார் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாப்பட்டிலுள்ள சதீஷ் எனும் ஸ்டீபனை அடையாளம் காட்ட, அவர்களைத் தேடி கோவைக்கு சென்றோம். நாங்கள் தேடுவது தெரிந்து அங்கேயிருந்து எஸ்கேப். அதன் பின் அவர்களைத் தேடி புதுச்சேரிக்கு சென்றோம். அப்பொழுதும் எஸ்கேப்..! அவர்களை விடாமல் சேசிங் செய்து விரட்டி மீன்சுருட்டி அருகில் வைத்து பிடித்தோம்.
அதன் பின் அவர்களிடம் விசாரிக்க, " சம்மந்தப்பட்ட மூவரும் சென்னை வளசரவாக்கத்தில் நடந்த திருட்டு ஒன்றில் சம்மந்தப்பட்டு சென்னை போலீசாரில் கைது செய்யப்பட்டு குண்டாஸ் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறையை விட்டு வெளியில் வந்த இவர்கள் டூவீலரைக் கொண்டு கோவை, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் சின்ன சின்ன பீரோ புல்லிங் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பணத்தை வைத்தை காரை வாங்கி பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிட காரைக்குடி பகுதிக்கு வந்துள்ளனர். இப்பொழுது நகருக்குள் நுழையும் பகுதி ஒன் வே என்பதால் சம்பவம் நடந்த வீட்டை பார்த்துள்ளனர். இரண்டு தடவைக்கு மேல் நோட்டம் விட்டவர்கள், இரவில் சத்தியன் தியேட்டரில் "மிக மிக அவசரம்" படம் பார்த்துவிட்டு கொள்ளையை நடத்தி தப்பியிருக்கின்றனர். இப்பொழுது பிடிப்பட்டுள்ளனர். விசாரித்துக் கொண்டிருக்கின்றோம்" என்கின்றனர் காரைக்குடி துணைச்சரக காவல்துறையினர். பீரோ புல்லிங் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.