கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், சிறு சிறு காரணங்களை கூறி வெளியில் சுற்றி வருபவர்களை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. இருப்பினும், அதனையும் முற்றிலும் தடுக்க, "உங்களுக்கு என்ன தேவையோ.? அதனை நாங்க கொண்டு வந்து தர்றோம்" என ஆண்ட்ராய்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்க, தனித்திரு.! விழித்திரு.! வீட்டிலிரு.!!! என மக்களிடையே சமூக விலகலை அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். இதற்காகவே, அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை விதித்து ஊரடங்கை நாடெங்கும் அமல்படுத்தியுள்ளது என்றாலும், சிறு சிறு காரணங்களைக் காட்டி வெளியே நடமாடுவோரும் உண்டு.
விழிப்புணர்வோடு வீட்டிலிருந்து தனக்கும், சமூகத்துக்கும் உதவாமல் நடமாடும் அவர்களிடம் முதலில் அன்பாகவும், அதட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த காவல்துறை பின்னாளில், அவர்களிடமிருந்து வாகனங்களை கைப்பற்றி வழக்கும் பதிந்தது. எனினும் இது முழுமை பெறவில்லை. இந்நிலையில் அதனையும் சரி செய்யும் விதமாக, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மருந்து பொருட்களை வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளலாமென, கலை நிலா சாக்ரடீஸ் என்பவர் உருவாக்கியுள்ள 'stay home karaikudi' என்ற ஆண்ட்ராய்ட் செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.
"ஒரே நேரத்தில் 1000- த்திற்கும் அதிகமானோர் இச்செயலியை பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்குத் தேவையானது / பதிவு செய்த பொருட்கள் வீடு தேடி வரும். இதிலும் மருந்து பொருட்களுக்கு தான் முன்னுரிமை. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் பொருட்கள் வாங்க வரவேண்டாம். கடைக்காரர்களை கொண்டே ஆர்டர் செய்த பொருட்களை வீடு தேடி டெலிவரி செய்வது ஒருபுறமிருப்பினும், தன்னார்வலர்களையும் இதில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். உங்களுடைய நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதனாலேயே இந்த செயலி." என்கிறார் ஆண்ட்ராய்ட் ஷாப்பிங் செயலியை அறிமுகம் செய்து வைத்த காரைக்குடி டிஎஸ்பி அருண்.