"சார்.!! அது மூன்றடி நீளமிருக்கும்.. கொஞ்சம் அசந்திருந்தேன் என்றால் என்னை அடிச்சிருக்கும். இப்பத் தான் இந்தத் தோட்டத்துக்குள்ளே போச்சு.!" என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர் கல்யாணி தான் கண்ணால் பார்த்த புலியைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கூற, " மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஊரில் புலியா..?! என தங்களையேக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ஊழியர் கொடுத்த தகவலை எடுத்து சம்பவட இடத்திற்கு விரைந்துள்ளது மானாமதுரை துணைச்சரக டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் டீம். அதற்குள் வனத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் புலி தகவல் செல்ல அனைத்து துறையினரும் அங்கு ஆஜராகினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தை சேர்ந்த பீசர்பட்டினத்திலுள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வைகை ஆற்றுப்படுகையில் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் மோட்டார் இணைப்பிற்கான சிறிய கட்டிடம். வழக்கம் போல் குடிநீரை திறந்துவிடுவதற்காக, மோட்டாரை இயக்க காலை எட்டரை மணிக்கு வந்திருக்கின்றார் ஊழியர் கல்யாணி. " தூரத்தில் உறுமல் சத்தத்துடன் அசைந்து அசைந்து இவரை ஒரு உருவம் வர, கண்ணெக்கெட்டிய தூரத்தில் அது "புலி" என தெரிந்திருக்கின்றது. "புலியை" பார்த்த பதட்டத்தில் குரல் எழும்பாமல் கை காலை ஆட்ட முயற்சித்திருக்கின்றார். அசைவினைக் கண்ட "புலியும்" அங்கிருந்து அடுத்த தென்னந்தோப்பிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்திருக்கின்றார்." ஊழியர் கல்யாணி.
டிஎஸ்பி கார்த்திக்கேயன், மாவட்ட வனத்துறை அலுவலர் ராமேசுவரன், தீயணைப்புத்துறை அதிகாரியும் இணைந்து தேடுதல் வேட்டையை துவக்க, " ஆமா.! சார் நாங்களும் பார்த்தோம்." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் தென்னந்தோப்பிலுள்ள வேலையாட்கள். கண்மாய்களில் கருவேல மரக்காடுகளை மட்டுமே கொண்ட மானாமதுரையின் புவியியல் அமைப்பில் அடர்வனம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
எனினும், வேட்டை நாய், வெடிகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தி தேடுதல் பணியினை தொடர்ந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.