"நானும் தொழிலாளியாக இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும்" எனச் சொல்லியபடி, தனது மகனின் திருமணத்தில் வேலை செய்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் செயல் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ரெட்ரோஸ் பழனிச்சாமி சிவகங்கையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகன் விஷ்ணுவர்தன் என்பவருக்கு சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், மணமகனின் தந்தை ரெட்ரோஸ் பழனிச்சாமி செய்த செயல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திருமண விழாவிற்காக சமையல் செய்தவர்கள், ஒளிப்பதிவு செய்தவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரையும் மேடைக்கு வரவழைத்த ரெட்ரோஸ் பழனிச்சாமி, அவர்களுக்கு தனது கையால் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதனால் ஆச்சரியமடைந்த பணியாளர்கள், என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். அதில் சிலர் கண்ணீரும் சிந்தினர்.
இதுகுறித்து அங்கு வேலை செய்த பணியாளர்கள் கூறும்போது, “கல்யாண பத்திரிகைலயே எங்களோட பெயர போட்டிருந்தாங்க. அப்போவே எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நாங்க எத்தனையோ கல்யாணத்துக்கு போயிருக்கோம். வேலை செஞ்சா பணம் கொடுப்பாங்க.. அவ்வளவுதான். ஆனா, இந்த மாதிரி யாரும் எங்கள கௌரவப்படுத்தல. எங்களுக்கு சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.
பின்னர், இந்த கதையின் நாயகனான ரெட்ரோஸ் பழனிச்சாமி கூறும்போது, "நானும் தொழிலாளியா இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும். என்னோட மகன் கல்யாணத்துல வேலை செஞ்சவங்கள கௌரவப்படுத்தணும்னு நெனச்சேன். அதுனால தான் அப்படி பண்ணேன்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.